தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகைக்கு அட்டவணைப் பிரிவினர்களுக்கான சிறப்பு நிதியை பயன்படுத்துகிறதா?

Tamil Selvi Selvakumar

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு அட்டவணைப் பிரிவினர்களுக்கான சிறப்பு நிதியைப் பயன்படுத்துவதாக எழுந்துள்ள புகார் குறித்து பதிலளிக்குமாறு தேசிய அட்டவணைப் பிரிவினர் ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு  நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தமிழ்நாடு அரசு தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு மகளிர் உரிமைத் தொகையை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு அட்டவணைப் பிரிவினர்களுக்கான சிறப்பு நிதியைப் பயன்படுத்துவதாக தமிழ்நாடு அரசு மீது புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக, தேசிய அட்டவணைப் பிரிவினர் ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இந்திய குடியரசுக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அன்புவேந்தன் அனுப்பியிருந்த புகாருக்கு நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் உண்மைத் தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. உரிய விளக்கம் அளிக்கவில்லை எனில் ஆணையத்தின் முன்பு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.