ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக, 30க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தை சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்தினர், இவர்களுக்கு இந்த இடத்தை அளந்து கொடுத்துள்ளனர். அதன்படி, அந்த இடத்தில் சிறிய அளவிலான குடியிருப்புகளை அமைத்து வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த இடத்தை தங்களுக்கு பட்டா அமைத்து தர வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆனால் பட்டா கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அப்பகுதியில் இருந்து வெளியேறும்படி மாவட்ட நிர்வாகத்தினர் வற்புறுத்தி வருவதாக குற்றம் சாட்டும் அப்பகுதி மக்கள்,
அளந்து கொடுக்கப்பட்ட இடத்தில் கடனை வாங்கி சிறிய வீடுகளை கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். பட்டா வழங்கினால் மேலும் சிறிய வீடுகளை கட்டிக் கொண்டு கூட்டமாக வாழ்வோம் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
பட்டா கிடைத்தால் மட்டுமே இவர்கள் வசிக்கும் பகுதிக்கு மின் இணைப்பு, சாலை வசதி, கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை கேட்டு பெற முடியும். ஆனால் பட்டா இல்லாததால், எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி, எந்த நேரத்தில் தங்களை காலி செய்ய சொல்வார்களோ என்று அச்சத்தில் வசித்து வருகின்றனர்.
பாசி மணி, ஊசி மணி, அலுமினிய பாத்திரங்கள், பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வரும் இவர்கள், தங்கள் முன்னோர்களை போல், காக்கை, குருவிகளை வேட்டையாடவும், பேருந்து நிலையங்கள், சாலைகளில் வசிக்கவும், யாசகம் கேட்கவும் விரும்பவில்லை என்றும்,
தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து, மற்ற மனிதர்களைப்போல் நல்ல வேலைக்கு சென்று கவுரவமாக வாழ வேண்டும் என்று விரும்பும் இந்த நரிக்குறவர் இன மக்கள், தங்களை ஊருக்கு ஒதுக்குப்புறமாக அனுப்பிவிட்டு முதல் தலைமுறையாக பள்ளிகளுக்கு செல்லக்கூடிய பிள்ளைகளின் கல்வியை தடை செய்யாதீர்கள் என்று
இருகரம் கூப்பி கோரிக்கை விடுக்கின்றனர்.
40 ஆண்டுகளாக இந்த இடத்தில் குடும்பம், குடும்பமாக வாழ்ந்து வரும் இவர்கள், தங்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்தால், எங்கள் உயிரை இங்கேயே மாய்த்துக் கொள்வோம் என்றும் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
அடுத்த தலைமுறையாவது படித்து முன்னேற வேண்டும் என்று துடிக்கும் இந்த நரிக்குறவர் இன மக்களை, அரசு உதவிக்கரம் நீட்டி, அவர்களின் வாழ்வின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.