தமிழ்நாடு

”அடுத்த 25 ஆண்டுகளில் சனாதனத்தை உலகம் ஏற்கும்" நம்பிக்கை தெரிவித்த ஆளுநர்!

Tamil Selvi Selvakumar

சனாதன தர்மத்தில் தீண்டாமை இருப்பதாக சிலர் சொல்வது அவர்களது அறியாமையை காட்டுகிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிகேணியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்டம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். தொடர்ந்து மேடையில் பேசிய ஆளுநர், பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவானது எனவும், இந்த பாரதத்தில் உருவானது தான் சனாதன தர்மம் என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், நாட்டில் சனாதன தர்மம் உருவாக தமிழ்நாடு முக்கிய காரணமாக இருந்துள்ளதாக கூறியவர், சனாதனம் தீண்டாமையை வலியுறுத்தவில்லை எனவும் திட்டவட்டமாக கூறினார். சனாதனம் என்பது எல்லோரும் சமம் தான் என குறிப்பிட்ட ஆளுநர், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலேயே பாரதம் என்பது தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் நினைவுக் கூர்ந்தார்.  

அருமையான அழகான சென்னை நகரத்தில் மிகச் சிறந்த ஆன்மீக தலைவர்கள், இலக்கியவாதிகள் மற்றும் கல்வியாளர்களும் வாழ்ந்து வந்துள்ளனர். மேலும், அடுத்த 25 ஆண்டுகளில் சனாதனத்தை உலகம் ஏற்கும் என்றும் ஆளுநர்  நம்பிக்கை தெரிவித்தார்.