பசும்பொன்னில் அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முக்குலத்தோர் சமூக வாக்குகள் அதிமுகவுக்கு தான் முழுமையாக கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று ( ஞாயிறு) காலை நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சி காலத்தில் மகளிருக்காக கொண்டு வரப்பட்ட திட்டங்கள் முடக்கப்பட்டு விட்டதாக கூறினார். நாடாளுமன்ற தேர்தலை முன் வைத்தே மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், தேர்தல் முடிந்ததும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும், பால் பாக்கெட்டுகளில் கூட முதலமைச்சரின் படம் இடம் பெற்றுள்ளது குறித்து பேசிய அவர், "காலையில் எழுந்தால் நல்லவர்கள் முகத்தில் முழிக்க வேண்டும். ஆனால், பாழாய் போனவர்கள் முகத்தில் முழிக்க வேண்டிய சூழல் உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் விளம்பர வெறியர்களாக உள்ளனர்" எனக் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், பசும்பொன்னில் அதிமுக பேனர்கள் கிழிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா காலத்தில் இருந்தே முக்குலத்தோர் வாக்கு அதிமுகவுக்கு கிடைத்து வருவதாகவும், வரும் தேர்தலிலும் அதிமுகவுக்கு இச்சமூகத்தினரின் வாக்கு முழுமையாக கிடைக்கும் என தெரிவித்தார்.
டி.என்.பி.எஸ்.சி தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சைலேந்திரபாபுவை நியமிக்கும் ஆணைக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காதது நல்ல விஷயம் என கூறிய அவர், அரசுக்கு ஜால்ரா அடித்தால் அதிகாரத்தில் இருக்கலாம் என நினைப்பதாக விமர்சித்தார்.
ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசிய குற்றவாளியின் நடமாட்டத்தை கண்காணிக்க தவறியது காவல்துறையின் தோல்வி எனவும், இதனால் சாமானிய மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் கூறினார்.