அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள் தற்போது சுகாதாரம் இல்லாமல், கேட்பாரற்று கிடப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் அம்மா உணவகங்கள் கேட்பாரற்று கிடப்பதாக குற்றம் சாட்டியுள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஏழை – எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்ட அம்மா உணவகங்கள், தற்போது திமுக ஆட்சியில் கேட்பாரற்று கிடக்கின்றன.
இதையும் படிக்க : "மின் வாரியத்தில் வேலை வேண்டுமா...? கொஞ்சம் செலவாகும்": நூதன மோசடியில் ஈடுபட்ட கும்பல்!!
அம்மா உணவகங்கள் இயங்குவதற்கு நிதி அளிக்காதது, அங்குள்ள பணியாளர்களை பணியிலிருந்து நீக்குவது, வசதிகளை ஏற்படுத்தித் தராதது போன்ற பல காரணங்களால் அவற்றின் செயல்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. அத்துடன் பெரும்பாலான அம்மா உணவகங்களில் சுகாதாரமற்ற நிலையே உள்ளதாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, அம்மா உணவகங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, மடை மாற்றப்பட்டுள்ளதோ என்ற எண்ணம் எழுவதாக தெரிவித்துள்ளார். ஆகவே, ஊழியர் பற்றாக்குறை, நிதி மற்றும் பொருட்கள் பற்றாக்குறையை போக்கி அம்மா உணவகத்தை திறம்பட நடத்திட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு ஓ. பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.