தமிழ்நாடு

சமூக நீதிக்கான முதல் தேசிய மாநாடு...உரையாற்றிய முதலமைச்சர்!

Tamil Selvi Selvakumar

உயர் சாதியினர் மட்டும் படிக்கலாம் என்ற நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா். 

சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு, டெல்லியில் நடைபெற்றது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இம்மாநாட்டில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் தமிழ்நாடு சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், சமூக நீதியை நிலைநாட்டுவதில் திமுக அரசு கவனமாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிட்ட அவர், மத்திய பாஜக அரசு உயர்சாதி ஏழைகள் என்று கூறி இடஒதுக்கீடு தருகிறது இது சமூக நீதி அல்ல எனவும் குற்றம்சாட்டினார்.

தொடா்ந்து பேசிய அவா் பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோருக்கான இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு சமூக நீதிக்கான புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.  சமூகநீதியை காக்கும் கடமை நமக்குத்தான் உள்ளது என்று பேசிய முதலமைச்சர், புறக்கணிக்கப்பட்டோரை கைத்தூக்கி விடுவதுதான் சமூகநீதி எனவும் தொிவித்துள்ளாா். 

மேலும், முதலமைச்சா் கூட்டாட்சி, மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சோசியலிசம் மற்றும் சமூக நீதி ஆகிய கொள்கைகளை இந்தியா முழுவதும் நிலைநாட்ட நாம் குரல் கொடுக்க வேண்டும். அது தனித்தனி குரலாக இருக்கக் கூடாது. அது ஒற்றுமையின் குரலாக, கூட்டணிக் குரலாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.