தமிழ்நாடு

திருச்சியில் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் முதலமைச்சர்!!

Malaimurasu Seithigal TV

திருச்சியில் இன்று நடைபெறவுள்ள 15 மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவா்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறாா்.

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களின் வாக்குச்சாவடி முகவா்கள் பயிற்சி பாசறை கூட்டம் திருச்சி கருமண்டபம் ராம்ஜி நகரில் இன்று நடைபெறுகிறது. இதில் குறிப்பிட்ட மாவட்டத்தை சோ்ந்த 12 ஆயிரத்து 645 வாக்குச்சாவடி முகவா்கள் கலந்து கொள்கின்றனா். 

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்தும், தேர்தல் பணியை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்குகிறார்.

இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் திருச்சி செல்கிறார். தொடா்ந்து அவா் நாடாளுமன்ற தேர்தல் பணியை தொடங்கி வைப்பது மட்டுமல்லாமல் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடனும் ஆலோசனை மேற்கொள்கிறார். 

நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும், தி.மு.க. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தொடா்ந்து அவா் நாளை நடைபெறவுள்ள விவசாயிகள் சங்கம் கண்காட்சியை திறந்து வைத்து சிறப்புரையாற்றுவார் எனவும் தெரிகிறது.