’நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுகாதாரத் துறை சாா்பில் தமிழ்நாடு முழுவதும் 18 முதல் 69 வயதுடைய மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 24 சதவீதம் போ் உயா் ரத்த அழுத்தம், 7 சதவீதம் போ் சா்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து, இளம் தலைமுறையினரை இந்த பாதிப்பிலிருந்து காத்திடும் பொருட்டு நவம்பர் 4-ஆம் தேதி ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை பெசன்ட் நகரில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தை இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொட்டும் மழையை பொருட்படுத்தால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குடை பிடித்தபடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதேபோல், நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தினை 37 மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தொடங்கிவைத்தனர். இதில், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.