தமிழ்நாடு

"மூன்றாவது நீதிபதி வந்தால் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும்" - சட்டத்துறை அமைச்சர்!

Malaimurasu Seithigal TV

நாகப்பட்டினம் அருகே கோவில் விழா ஒன்றில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, செந்தில் பாலாஜி வழக்கில் மூன்றாவது நீதிபதி வந்தால், எங்களுக்கு நல்ல தீர்ப்பே கிடைக்கும் என கூறியுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலின் மகா கும்பாபிஷேகம் நாளை வெகு விமர்சையாக நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றது. இதையொட்டி விழா ஏற்பாடுகளை பார்வையிட்ட சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பக்தர்களின் பாதுகாப்புக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, செந்தில் பாலாஜி வழக்கில் திமுக எடுத்து வைத்த வாதத்தை நீதி அரசர் நிஷாபானு ஏற்றுக் கொண்டது எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாகவும், மூன்றாவது நீதிபதி மூலம் தங்களுக்கு நல்ல தீர்ப்பும், நியாயமும் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என கூறியுள்ளார்.

மேலும், மத்திய அரசின் ஏவல் துறையாக உள்ள அமலாக்கத்துறையின் அச்சுறுத்தலுக்கு திமுக பயப்படாது என்றும், அமலாக்கத் துறையின் வழக்குகளுக்கு தவறு செய்தவர்கள் மட்டுமே அஞ்ச வேண்டும். அந்த தவறை செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்றும், தவறிழைக்காத நாங்கள் தப்பித்துக் கொள்வோம். அதற்கான வழிமுறையும் எங்களுக்கு தெரியும் என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.