அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
அதிகாரப்போட்டி:
அதிமுகவில் யாருக்கு பொதுச்செயலாளர் பதவி என்ற அதிகாரப்போட்டி நிலவி வருகிறது. அதிமுகவில் நீண்டகாலம் இரட்டை துப்பாக்கிகளாக செயல்பட்டு வந்த ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் தற்போது ஒற்றை தலைமை பிரச்னையில் இரண்டு அணிகளாக பிரிந்து ஒருவரை ஒருவர் விமர்சனங்களால் தாக்கி கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுக்குழு வழக்கு:
அதில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தற்போது அது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த இரண்டு நாட்களாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...நிறுத்திய மாவட்ட ஆட்சியர்...அதிருப்தி அடைந்த கிராம மக்கள்...!
நீதிபதிகள் சொன்னது என்ன?:
இந்த வழக்கு விசாரணையில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் இருவரும் ” இந்த வாரமே அதிமுக பொதுக்குழு வழக்கை நிறைவு செய்வதே தங்களின் விருப்பம்” என்று கூறி வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.
அதிமுகவை விமர்சித்த மனோ தங்கராஜ்:
இந்நிலையில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிமுக குறித்து விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், "அதிமுக வலுவான கட்சி என்பது அறியாமை. அது ஒற்றுமையாகவும் இல்லை, ஒரே கட்சியாகவும் இல்லை. அது ஒரு பிரிந்து போன கூடை. அதில் எந்த பழத்தையும் வைத்து பாதுகாக்க முடியாது. அது திரிந்துபோன பால். காபியோ டீயோ போட முடியாது. திமுக கொள்கை ரீதியாக கட்டமைக்கப்பட்டு வலுவான கூட்டணியுடன் இருக்கும் கட்சி" என்று குறிப்பிட்டு உள்ளார்.