தஞ்சையில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு செய்தார்.
தஞ்சை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைச்சர்கள் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் குழுவை அமைத்தார்.
அதன்படி, அம்மாப்பேட்டை, உக்கடை, ஆம்பலாபட்டு உள்ளிட்ட கிராமங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர் சக்கரபாணி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சக்கரபாணி, தஞ்சை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 87 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல், கடலை, உளுந்து, பச்சை பயிருகள் உள்ளிட்ட பயிர்கள் பாதிப்படைந்துள்ளது. தற்போது 19 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்யப்படும் நிலையில், விவசாயிகள் 22 சதவிகிதம் வரை கேட்டு கோரிக்கை வைக்கின்றனர்.எனவே, விவசாயிகளின் கோரிக்கை குறித்து முதலமைச்சரிடம் விரைவில் தெரிவிப்போம் என்றும், மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.