பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் வழங்காதது குறித்து அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.
பொங்கல் பரிசு:
தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து குடும்ப அரிசி அட்டைத்தாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசியும், சர்க்கரையும், 1000 ரூபாய் ரொக்கப்பணமும் வழங்குவதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஆலோசித்து எடுத்த முடிவு:
கடந்த முறை தைப்பொங்கலையொட்டி, 14 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக எதிர்க்கட்சிகளும், எங்களுக்கு பொருட்கள் சரியாக வந்தடையவில்லை என்று பொதுமக்களும் குற்றம் சாட்டினார். அதனால் இந்த முறை தைப்பொங்கலுக்கு பொதுமக்களுக்கு என்ன வழங்கலாம் என்று முதலமைச்சர் ஆலோசனை நடத்தி, அதன்பின்னர் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் கண்டனம்:
இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து பல்வேறு கண்டனங்கள் எழுந்து வருகிறது. பொங்கல் பரிசில் கரும்பு இல்லாதது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று கூறி வருகின்றனர்.
கரும்பு வெல்லம் வழங்காதது ஏன்?:
இந்நிலையில், மதுரை, புதுநத்தம் பகுதியில் 114 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வரும் கருணாநிதி நூலக பணிகளை பார்வையிட்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் பொங்கல் பரிசில் கரும்பு வெல்லம் வழங்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
விளக்கமளித்த எ.வ.வேலு:
அதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, பொங்கலுக்கு கரும்பு கொடுத்தால் அரைக்கரும்பு, முழுக்கரும்பு, கால்கரும்பு கொடுப்பதாக புகார் சொல்கிறார்கள். வெல்லம், முந்திரி கொடுத்தாலும் சின்ன முந்திரி, உடைந்துள்ளது, வெல்லம் ஒழுகுகிறது, ஏலக்காய் சிறியதாக உள்ளது என பொதுமக்கள் குறைகூறுகிறார்கள். அதனால் தான், இந்தமுறை வேண்டிய பொருட்களை அவர்கள் வாங்கிக்கொள்ளவே முதலமைச்சர் ஆயிரம் ரூபாய் வழங்குகிறார் என்று விளக்கம் அளித்துள்ளார்.