தமிழ்நாடு

மேகதாது அணை; சித்தராமையா அறிவிப்பிற்கு வைகோ கண்டனம்!

Malaimurasu Seithigal TV

மேகேதாட்டு அணை கட்ட மத்திய அரசிடம் தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதலமைச்சரின் அறிவிப்பிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசின் 2023- 2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா நேற்று (ஜூலை-7) கர்நாடக சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை உரையை வாசித்த அவர் மேகேதாட்டு அணை கட்ட மத்திய அரசிடம் தேவையான ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். மேலும், முதல் திட்ட அறிக்கை, சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற மத்திய அரசிடம் மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அணைக்கு நிலம் கையகப்படுத்துவதே அரசின் முதன்மைப் பணி என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து, மேகதாது அணைக்கு நிலம் கொடுக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் நிலம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

இதனை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றம்,16.02.2018 இல் வழங்கிய தீர்ப்பிலும், காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கர்நாடக மாநிலத்திற்கு எந்த உரிமையும் இல்லை எனவும் தமிழ்நாடு அரசின் ஒப்புதல் பெறாமல் எந்தக் கட்டுமானமும் மேற்கொள்ளக்கூடாது என்று தெளிவுபடுத்தப் பட்டுள்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நடுவர் மன்றம் வழிகாட்டுதல் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம், தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய நீரை காவிரியில் திறந்துவிட கர்நாடக மாநிலத்திற்கு உத்தரவிட முடியாத கையறு நிலையில்தான் இயங்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், ஜூன், ஜூலை மாதங்களுக்கான தண்ணீரை பெற்றுத்தந்தால் மட்டுமே குறுவை சாகுபடி செய்யமுடியும் என்று காவிரிப் படுகை விவசாயிகள் கவலையுடன் காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, மேகேதாட்டு அணை கட்டப்படுமானால், காவிரிப் படுகைப்  பகுதிகள் பாலைவனம் ஆகி விடும் என எச்சரித்துள்ள வைகோ, எனவே ஒன்றிய அரசு மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, ஏற்கனவே கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் மேகதாதுவில் அணைகட்ட அனுமதி வழங்கக்கோரி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து மேகாதாதுவில் அணைக்கட்ட தடை விதிக்கக் கோரினார். இந்நிலையில் கர்நாடக முதலமைச்சர் மேகதாதுவில் அணைக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவித்தது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.