தமிழ்நாடு

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவ துறை ஆராய வேண்டும் - சுகாதார மாநாடு 2022ல் முதலமைச்சர் உரை

கல்வி மற்றும் மருத்துவம் இந்த அரசின் இரு கண்கள் என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அதில் மக்கள் நல்வாழ்த்துறை மகத்தான துறையாக தற்போது செயல்பட்டு வருகிறது - முதலமைச்சர்

Malaimurasu Seithigal TV

சுகாதார மாநாடு - 2022

சென்னை, ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற 'சுகாதார மாநாடு - 2022' ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.


முதலமைச்சரின் மாநாட்டு உரை 

மாநாட்டை துவக்கி வைத்த பின்னர் உரையாற்றிய முதலமைச்சர், கல்வி மற்றும் மருத்துவம் இந்த அரசின் இரு கண்கள் என்று நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். அதில் மக்கள் நல்வாழ்த்துறை மகத்தான துறையாக தற்போது செயல்பட்டு வருகிறது. 

ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்ட மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு தலைமை மருத்துவமனைகள் ஒருங்கிணைந்த முதல் மாநாடாக இந்த மாநாடு நடைபெறுகிறது இதனை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.


இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டம் 

தொடர்ந்து பேசிய அவர், மக்களை தேடி மருத்துவம் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், சுப்புலட்சுமி மகளிர் உதவி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்த்துறையில் மக்களுக்காக செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக மக்களை தேடி மருத்துவம் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம் இந்த மூன்று திட்டமும் இந்தியாவில் இதுவரையில எந்த மாநிலத்திலும் செயல்படாத திட்டங்கள் என்பதை பெருமையுடன் சொல்கிறேன் என தெரிவித்தார்.

முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாடு 

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை,  சுகாதாரம் அகியவற்றில் தமிழ்நாடு மேலும் மேலும் புகழ் அடைய வேண்டும் என்பது எனது விருப்பம் எனவும், எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையை தமிழ்நாடு செய்து வருகிறது என்ற அவர், தடுப்பூசியிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. மேலும், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்று கூறினார்.


நோய் எதிர்ப்பு சக்தி குறைவே பல நோய்களுக்கு காரணம்

மருத்துவ வளர்ச்சி மேம்பாட்டிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்க வேண்டும், அதற்கான திட்டங்களைப்  போட வேண்டும். நோய்கள் புது புது அவதாரம் எடுத்து வருகிறது அதனை வெல்லும் அளவில் இருக்க வேண்டும்  என்று பேசிய முதலமைச்சர், நோய் எதிர்ப்பு சக்தி குறைவே பல நோய்களுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. எனவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக அரசின் சார்பில் என்ன செய்யலாம் என்பது குறித்து திட்டமிட வேண்டும் என்றார்.


மேலும், அரசு மருத்துவமனைக்கு தேவையான உட்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளின் செயல்பாடுகளை அவ்வப்போது தணிக்கை செய்ய வேண்டும். தமிழ்நாடு சுதாரத்துறை உயரிய நிலையை எட்ட வேண்டும் என்பதே விருப்பம் என தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்