பருப்பு உள்ளிட்ட உணவு தானிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழகத்தில் 25 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன மயமாக்கப்பட்ட அமுதம் மக்கள் அங்காடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க : கீழடியில் தங்க கம்பி, காளை பொம்மை உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுப்பு...!
பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மற்ற கடைகளை காட்டிலும் இங்கு மிகவும் குறைந்த விலையில் முதல் தரத்தில் உணவுப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மற்ற மாவட்டங்களுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
அப்போது, காய்கறி விலை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், தமிழ்நாட்டில் உணவு பொருட்கள் பதுக்கப்படவில்லை என்ற அமைச்சர் சக்கரபாணி, விளைச்சல் குறைவு காரணமாக விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.