தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமூகத்தை ஏற்படுத்த மாரத்தான் போட்டி...! டிஜிபி பங்கேற்பு...!

Malaimurasu Seithigal TV

மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய சமூகத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு பங்கேற்று ஓடினார்.

சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளை ஒதுக்காமல், அவர்களையும் உள்ளடக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில், அனைவரையும் உள்ளடக்கிய மாரத்தான் போட்டி நடைபெற்றது. அனைத்து வகை மாற்றுத்திறனாளி மகளிர் வாழ்வுரிமை அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாரத்தான் போட்டியில் சிறப்பு  அழைப்பாளராக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு பங்கேற்றார். அதிகாலை 5:30 மணிக்கு தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியில்  மாற்றுத்திறனாளிகள், பெண்கள், சிறுவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆவலுடன் பங்கேற்றனர். 

முன்னதாக, புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சூம்பா நடனம் நிகழ்த்தப்பட்டது. இதில், டிஜிபி சைலேந்திர பாபுவும் பங்கேற்று நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.அதை தொடர்ந்து, மாரத்தான் போட்டியை டிஜிபி சைலேந்திர பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், அவரும் தனது பங்களிப்பை அளிக்கும், வகையில் மாற்று திறனாளிகளுடன் இணைந்து மாரத்தான் ஓடினார். 5 கிலோ மீட்டர் தூரம், 3 கிலோ மீட்டர் தூரம் என இரண்டு பிரிவாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.