பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண் சுவாமி நேற்று காலமானதையடுத்து, இரங்கல் செய்தியை பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல செய்தி வாசிப்பாளர்:
அகில இந்திய வானொலியில் பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பின் ஓய்வு பெற்றவர் செய்தியாளர் சரோஜ் நாராயண் சுவாமி. 87 வயதான இவர், நான்கு சகாப்தாங்களாக செய்திகள் வாசித்து தனது குரலால் தமிழர்களை வசீகரித்தவர். தனது கம்பீர குரலால் செய்திகளை தெளிவாக தெரிவிக்கும் வல்லமை பெற்றவர். அப்போதைய சூழலில், வானொலி ஒன்றே நமக்கு செய்திகளை தெரிவிக்கும் ஊடகமாக இருந்து வந்தது. அப்படிபட்ட சூழலில், தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூரில் பிறந்து, மும்பையில் வளர்ந்து தலைநகர் டெல்லியில் தனது குரலால் அகில இந்திய வானொலியில் வழங்கும் பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளராகி மக்களுக்கு செய்திகளை வழங்கி வந்தார்.
காலமானார்:
மக்களுக்கு தனது கனகம்பீரமான குரலால் செய்திகளை வழங்கி வந்த சரோஜ் நாராயணசுவாமி, அவருக்கு பின் வந்தவர், தற்போதைய செய்தி வாசிப்பாளர் என எல்லோருக்கும் ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார். அத்துடன் இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்திருந்தது. இந்நிலையில் அகில இந்திய வானொலியில் தமிழ் செய்திப் பிரிவில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த சரோஜ் நாராயணசுவாமி கடந்த 1995-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து மும்பையில் வசித்துவந்த இவர், முதுமை காரணமாக நேற்று காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின், மூத்த செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி அவர்களின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ”அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்றுவிட்டது திருமதி சரோஜ் நாராயண்சுவாமி அவர்களின் குரல்! மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது என்பதை அறிந்ததும் வேதனையடைந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழிசை செளந்தரராஜன்:
தெலங்கானா மாநில ஆளுநர் திருமதி தமிழிசை செளந்தரராஜன், மூத்த செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி அவர்களின் மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ”அகில இந்திய வானொலியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண் சுவாமி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். வானொலியில் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளரான இவர் தனது கம்பீரமான குரலால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர்.
ஆவணப் படங்கள் இயக்குவது, மொழிபெயர்ப்பு செய்வது உள்ளிட்ட பணிகளையும் இவர் செய்து வந்தார். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.