தமிழ்நாடு

பார்வையற்றோர் பள்ளியில் நிரப்பப்டாத பணியிடங்கள்; தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Malaimurasu Seithigal TV

தமிழகம் முழுவதும் உள்ள பார்வை மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பள்ளிகளில் உள்ள காலி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, அந்த பள்ளிகள் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையை அடுத்த பூந்தமல்லி, திருச்சி, தஞ்சாவூர், சேலம், மதுரை புதுக்கோட்டை, சிவகங்கை, கோவை, தர்மபுரி மற்றும் கடலூர் ஆகிய இடங்களில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்த பள்ளிகளில், முதல்வர் மற்றும் முதுகலை பட்டதாரி, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 50 சதவீதத்துக்கும் மேல் காலியாக இருப்பதாக கூறி, வழக்கறிஞர் புகழேந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், மொத்தமுள்ள 10 பள்ளிகளில் ஐந்து பள்ளிகளில் முதல்வர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும்; 14 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, 20 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 10 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும்; 74 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் 61 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரி எவரும் நியமிக்கப்படவில்லை எனவும், காலிப்பணியிடங்களை நிரப்பாததால் பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அரசு கண்டுகொள்ளவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

கல்வி உரிமைச் சட்டப்படி இந்த பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, அக்டோபர் 10ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.