தமிழ்நாடு

பெரியாரின் 145- ஆவது பிறந்த நாள்...அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை!

Tamil Selvi Selvakumar

சமூக சீர்திருத்தவாதி பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வே.ராமசாமியின் 145 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர்.

பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் திமுக பவள விழாவில் பங்கேற்பதற்காக வேலூர் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திற்கு வெளியே அமைந்துள்ள, பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, சமூக நீதி நாள் உறுதி மொழியையும் ஏற்றுக் கொண்டனர்.

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முத்துசாமி ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.  

இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர்  எடப்பாடி  பழனிசாமி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை அளித்தார். அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் பெரியார் சிலைக்கு  மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் ஒன்றரை ஆண்டுகளாக தரவுகளை  சேகரிப்பதாகக் கூறி தமிழ்நாடு அரசு தாமதித்து வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார்.

முதலமைச்சர் சமூக நீதி என்று பேசினால் மட்டும் போதாது அதை செயல்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், இது வன்னியர்களுக்கான பிரச்சனை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூக நீதிப் பிரச்சினை என்று குறிப்பிட்டார்.