தமிழ்நாடு

தீபாவளி: களை கட்டும் இறுதி நேர விற்பனை...!

Malaimurasu Seithigal TV

நாளை தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு கடைகளில் இறுதி கட்ட விற்பனை களை கட்டி வருகிறது. 

விடிந்தால் தீபாவளி என்ற நிலையில், தஞ்சையில் புத்தாடை மற்றும் பட்டாசு உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தஞ்சை அண்ணாசாலை, காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் புத்தாடைகளை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆடைகள், நகைகள், வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் தற்காலிக கடைகளை அமைத்து இறுதி கட்ட விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

திருப்பூரில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வரும் நிலையில், தீபாவளியை ஒட்டி, சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதனால், பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அத்துடன், தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்ட நிலையில், குடும்பதினருக்கு புத்தாடைகள், காலணிகள், பட்டாசு உள்ளிட்டவைகளை வாங்கிச் செல்வதற்காக, கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சேலம், கடலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.