தமிழ்நாடு

என்கவுண்ட்டர் செய்யப்பட்ட காக்காத்தோப்பு பாலாஜி ‘திக் திக்’ நிமிடங்கள்...

மாலை முரசு செய்தி குழு

சென்னை பிராட்வே காக்கா தோப்பு பகுதியில் வசித்து வந்ததால் பாலாஜி, காக்கா தோப்பு பாலாஜி என அழைக்கப்பட்டு வந்தார். சிறு வயதில் இருந்தே பாலாஜிக்கு சென்னையிலேயே பயங்கர ரவுடியாக வேண்டும் என்ற ஆசை இருந்தது.

சில வருடங்களுக்கு முன்பு ரவுடி தாமுவின் அண்ணன் புஷ்பா என்பவரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்ததுதான் பாலாஜியின் முதல் சம்பவம். பின்னர் யார் பெரியவர் என்ற போட்டியில் சதீஷ், பில்லா சுரேஷ் ஆகியோரை கொலை செய்தார்.

ஆரம்பத்தில் புறா பந்தயம் விட்டுக் கொண்டிருந்த பாலாஜி, ஒரு கட்டத்தில் செம்மரக் கடத்தலிலும் ஈடுபட்டு கொள்ளை லாபம் பெற்றார். இதனிடையே அவ்வப்போது வேறு ஏரியா ரவுடிகளுடன் மோதல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்ற செயல்களிலும் ஈடுபட்டு வந்தார்.

அந்த வகையில் கடந்த 2021-ம் ஆண்டு தேனாம்பேட்டையில் வழக்கு ஒன்றில் ஆஜரான காக்கா தோப்பு பாலாஜி, சி.டி. மணி என்பவருடன் காரில் சென்றார்.

அப்போது மற்றொரு ரவுடியான சம்போ செந்தில், நாட்டு வெடிகுண்டை எடுத்து காக்காதோப்பு பாலாஜியின் கார் மீது வீசினார். இதில் பாலாஜி, மணி ஆகியோர் உயிர் தப்பியதைத் தொடர்ந்து, இவர்களுக்கும் சம்போ செந்திலுக்கும் முன்விரோதம் வளர்ந்தது.

சமீபத்தில் நடந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்போ செந்தில் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். ஆனால் சம்போ செந்திலின் பரம எதிரியாக இருந்தவர்தான் இந்த காக்கா தோப்பு பாலாஜி.

6 கொலை வழக்கு, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து என 59 வழக்குகள் நிலுவையில் உள்ள பாலாஜி இதுவரை 12 முறை குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் 2021-ம் ஆண்டு ஜாமினில் வெளியே வந்ததில் இருந்து காக்காத் தோப்பு பாலாஜி தலைமறைவாக இருந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். பல மாதங்களாக காவல்நிலையங்களில் கையெழுத்திடாமல் தண்ணி காட்டி வந்த பாலாஜியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் செப்டம்பர் 18-ம் தேதியன்று நண்பர்களுடன் வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார் காக்கா தோப்பு பாலாஜி. அப்போது கொடுங்கையூரை அடுத்த முல்லைநகர் மேம்பாலம் பகுதியில் பணியில் ஈடுபட்ட போலீசார் காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்த காக்காத் தோப்பு பாலாஜிதான் என அறிந்த காவலர் ஒருவர், பணியில் இருந்த மற்றொரு காவலரிடம் பதற்றத்துடன் தெரிவித்தார்.

ஆனால் ஓட்டுநருடன் இருந்த மற்றொருவர் திடீரென வாகனத்தை இயக்க அதிவேகமாய் கார் சென்றது. உடனே காவல்துறையினருக்கும், மர்ம நபர்களுக்கும் பயங்கர சேஸிங் நடந்தது. இதில் அதிவேகமாக சென்ற கார், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள பி.டி. குடியிருப்பு பகுதியை அடைந்தது.

இதில் காரில் இருந்து இறங்கிய காக்காத் தோப்பு பாலாஜி, புதரை நோக்கி தாவினார். மேலும், முதுகுக்கு பின்னால் பேண்ட்டில் மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்த பாலாஜி, தன்னை துரத்தி வந்த காவலர் சரவணனை நோக்கி சுட்டார்.

கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன்

நல்ல வேளையாக சரவணன் பின் பக்கமாக சரிந்து கொள்ள, துப்பாக்கியில் இருந்து வந்த இரண்டு தோட்டாக்கள் காவல்துறை வாகனத்தின் பேனட் மற்றும் கண்ணாடியில் பாய்ந்தன. உடனே துப்பாக்கியை எடுத்த காவலர் சரவணன், தற்காப்புக்காக பாலாஜியை சுட்டுத் தள்ளினார்.

இதில் பாலாஜியின் இடது பக்க மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தான். இதையடுத்து அவரை மீட்ட போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாலாஜியின் உயிர் பிரிந்தது.

பின்னர் காக்காத் தோப்பு பாலாஜியின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காக்காத் தோப்பு பாலாஜியின் உடல்