கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை நடத்தி வரும் சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
தீபாவளிக்கு முதல்நாளான அக்.23 ஆம் தேதி, கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக ஒரு கார் வெடித்து சிதறியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு தற்போது விசாரித்து வருகிறது. இதற்கு முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நகர போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.
ஜமேஷா முபீன் என்பவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டமரப்பலகையில் அல்லாவின் வீட்டைத் தொடுபவர் வேரோடு பிடுங்கப்படுவார் என எழுதப்பட்டிருந்தது.
இது குறித்து கோவை போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். அவர்கள் முபீனின் வீட்டில் இருந்து கையால் எழுதப்பட்ட குறிப்புகள் மற்றும் பிற ஆவணங்களை மீட்டெடுத்துள்ளனர். இது தவிர ஜிகாத் குறித்து கையால் எழுதப்பட்ட குறிப்புகளும் கிடைத்துள்ளன.
மேலும் மனித இனம் முஸ்லீம்கள் மற்றும் காபிர்கள் என பிரிக்கப்பட்டுள்ளது எனவும் எழுதப்பட்டுள்ளது. இது தீவிரமயமாக்கலின் சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.
இளைஞர்களின் கடமை:
ஆதாரங்களின்படி, அதிகாரிகள் கையால் எழுதப்பட்ட குறிப்பைக் கண்டுபிடித்துள்ளனர். அதில் - ஜிகாத் இளைஞர்களின் கடமை எனவும் அது குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கடமை அல்ல எனவும் எழுதப்பட்டுள்ளது.
முபீனின் வீட்டில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கொடியின் படம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.