தமிழ்நாடு

இன்னும் காலம் கடந்துவிடவில்லை... முதலமைச்சருக்கு கரு.நாகராஜன் வேண்டுகோள்...

இன்னும் காலம் கடந்துவிடவில்லை தற்போது அனுமதி கொடுத்தால் கூட குறைந்த அளவில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தயாராக உள்ளோம் என  முதலமைச்சருக்கு தமிழக பாஜக பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் வேண்டுகோள் விடுத்தார்.

Malaimurasu Seithigal TV

தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் வாழ்த்து  அட்டை அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் கரு. நாகராஜன்,  துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு, தமிழகம் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட பல லட்சம் அளவிலான விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தபால் அட்டையில் மூலம் தலைமை செயலக முகவரிக்கும், சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சரின் வீட்டு முகவரிக்கும் அனுப்பி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கரு. நாகராஜன் கூறுகையில், மாநில தலைவர் அண்ணாமலை, முதலமைச்சருக்கு வாழ்த்து அட்டை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறார்.  அதன்படி பல்வேறு மாவட்டங்களில் பெற்ற வாழ்த்து அட்டையை முதலமைச்சர் விலாசத்திற்கு அனுப்ப உள்ளோம் என்றும், ஏறத்தாழ 87 சதவீத இந்துக்கள் மக்கள் உள்ள அரசு இது என்று கூறினார்.

திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் ஊரடங்கே இருக்காது என்று கூறினார்கள். அதேபோல் ஏசி இருக்கும் இடத்தில் தான் கொரோனா அதிகம் பரவும், அப்படி இருக்க திரையரங்கிற்கு இந்த அரசு அனுமதி அளித்து, இந்து மக்களுக்கு விரோதமாக விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி மறுத்துள்ளனர். மேலும் தமிழக அரசு மொட்டை அடிக்க இலவசம் என்று அறிவித்துள்ளது போன்று, தமிழக மக்கள் உணர்விற்கு அரசு மொட்டை அடித்துள்ளது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் இந்து மக்களுக்கு ஒரு முறை கூட வாழ்த்து தெரிவித்தது இல்லை மதச்சார்பற்ற கட்சி என்கிறார்கள். ஆனால் மதம்சார்ந்து தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சாடிய அவர், இனிமேலாவது இந்து மக்களுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து கூறுவார் என ஏக்கத்தோடு  எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டம், சிஏஏ சட்டங்கள் உள்ளிட்டவற்றை எதிர் கட்சி என்கிற நோக்கத்திலே எதிர்த்து தமிழக அரசு தீர்மானம் கொண்டு வருகின்றனர் என்றும், குடியுரிமை சட்டத்தால் இந்திய குடிமகன் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை என்று பேசினார்.

பாஜக மதம் சார்ந்த செயல்படுவதாக அமைச்சர் சேகர்பாபு கூறியிருக்கிறார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது விநாயகர் சதுர்த்தியை வைத்து மத ரீதியிலான அரசியலை திமுகதான் செய்து வருகிறது என்று குற்றஞ்சாட்டினார்.