தமிழ்நாடு

தமிழகம் விரைந்தது கர்நாடக தனிப்படை...கர்நாடகவிற்கு விரைந்தது தமிழக காவல் தனிப்படை!தீவிரமடையும் விசாரணை!

Tamil Selvi Selvakumar

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், கர்நாடக மாநில காவல்துறை தமிழகத்திற்கு வருகை தந்துள்ளது. இதே போல்,  தமிழக காவல்துறையின் தனிப்படையும் மங்களூர் விரைந்துள்ளது.

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம்; தீவிரமடையும் விசாரணை:

கர்நாடகா மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் முக்கிய குற்றவாளியான ஷாரிக் இருவரும் படுகாயமடைந்தனர். மங்களூர் சம்பவத்துக்கும், கோவை குண்டுவெடிப்புக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மங்களூர் குண்டுவெடிப்பில் காயமடைந்த ஷாரிக்கின் செல்போன் எண்ணுக்கு, நாகர்கோவில் கோட்டாறு பகுதியில் பணிபுரியும் அஸ்ஸாமைச் சேர்ந்த அஜிஜுர் ரகுமான் என்பவரின் செல்போனில் இருந்து அழைப்பு வந்துள்ளது. இதுகுறித்து குமரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்துக்கு வந்த கர்நாடக காவல்துறை:

இதையடுத்து, மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, கர்நாடக மாநில காவல்துறையின் 2 தனிப்படைகள் கோவை மற்றும் நீலகிரி வந்தடைந்துள்ளன. இந்த குழுக்கள், கோவை குண்டுவெடிப்புக்கும், மங்களூர் குக்கர் குண்டுவெடிப்புக்கும் தொடர்பு உள்ளதா? என்பதை விசாரிக்க இருக்கிறது. இந்த குழுக்கள் நாகர்கோவிலுக்கும் செல்ல இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மங்களூர் விரைந்த தமிழக காவல் தனிப்படை:

இந்த நிலையில், மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியால்,  நாகர்கோவிலில் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர். இதனிடையே, மங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான ஷாரிக் கோவை தவிர்த்து மேலும் சில இடங்களில் தங்கியிருந்ததாக வந்த தகவலை அடுத்து, தமிழக காவல்துறையின் தனிப்படை மங்களூர் விரைந்துள்ளது.