தமிழ்நாடு

ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் வழங்கிய கமலஹாசன்!

Malaimurasu Seithigal TV

பேருந்து ஓட்டும் வேலையை இழந்த கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு, நடிகர் கமல்ஹாசன் கார் பரிசளித்துள்ளார். 

சமீப காலமாக சமூக வலைதளங்களில் பிரபலமாகி வந்த பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா தனியார் பேருந்து நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அண்மையில் இவர் ஓட்டி வந்த பேருந்தில் திமுக எம்பி கனிமொழி பயணம் செய்து உற்சாகப் படுத்தினார். 

இதனிடையே பிரபலங்களை வண்டியில் ஏற்றி, விளம்பரம் தேடுவதாக கூறி, ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில்,  தனியார் பேருந்து உரிமையாளர் மறுப்பு தெரிவித்தார்.

இதனையடுத்து கனிமொழியின் பரிந்துரைப்படி வேலையை இழந்த ஷர்மிளாவுக்கு டிரைவர் வேலை கொடுக்க பல முன்னணி பேருந்து நிறுவனங்கள் முன்வந்தன. இந்த நிலையில் வேலையை இழந்த ஷர்மிளாவுக்கு, கமல் பண்பாட்டு மையம் சார்பில், கார் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் ஷர்மிளாவை நேரில் அழைத்து, வாழ்த்து தெரிவித்து, கார் ஒன்றை பரிசளித்துள்ளார். 

இதன் மூலம் தொழிலாளியாக இருந்த ஷர்மிளா, வாடகை கார் ஓட்டும் தொழில் முனைவோராக மாறியுள்ளார். இது குறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷர்மிளா ஓட்டுநராக மட்டுமே இருக்க வேண்டியவர்  அல்ல, பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டும் என்றும், "ஆண்டாண்டு காலமாய் அடக்கி வைக்கப்பட்ட பெண்கள் தங்கள் தளைகளை உடைத்து, தரணி ஆள வருகையில், நாம்  அவர்கள் பக்கம் நிற்க வேண்டும்" என்றும் தெரிவித்துள்ளார்.