கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணமடைந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி மாணவியின் தாய் தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்த வந்த மாணவி கடந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி உயிரிழந்தார். மாணவி மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.
மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மறு உடற் கூறாய்வுக்கு உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது விசாரணை முடியும் நிலையில் இருப்பதாகவும் விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் சிபிசிஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாணவி மரணமடைந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி மாணவியின் தாய் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகர் முன்பு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
அதில், சிபிசிஐடி விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால் வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைக்க கோரி தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு கடந்தாண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மனு அளித்ததாக கூறியுள்ளார்.
அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் எனவே ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிக்க: சென்னை நிகழ்ச்சியில் பங்கேற்ற இசைப்புயல் ரஹ்மான்.....!!