தமிழ்நாடு

கலாஷேத்ரா விவகாரம் : வீட்டிற்கே அழைத்த பேராசிரியர்...விசாரணையில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்...!

Tamil Selvi Selvakumar

கலாஷேத்ரா விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் மற்றும் முன்னாள் டிஜிபி லத்திகா சரண் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 

கலாஷேத்ரா விவகாரத்தில் பாலியல் புகாருக்கு உள்ளான 4 பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் நடத்திய பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து, மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி நேரில் விசாரணை மேற்கொண்டார். புகாரின் பேரில் பேராசிரியர்கள் ஹரிபத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத் மற்றும் சாய் கிருஷ்ணா ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். 

மாணவிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், 200 பக்கங்கள் கொண்ட அறிக்கை தலைமை செயலாளர் இறையன்புவிடம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன், முன்னாள் டிஜிபி லத்திகா சரண் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியர் ஹரிபத்மன், கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவியை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்ததுடன், மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், ஹரிபத்மனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.