தமிழ்நாடு

செந்தில் பாலாஜிக்கு ஒரு நீதி? மக்களுக்கு வேறு நீதியா?  சீமான் கேள்வி!

விசாரணையின்போது கொல்லப்பட்ட புளியங்குடி தங்கசாமி மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது கொலைவழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Malaimurasu Seithigal TV

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒரு நீதி? சாமானிய மக்களுக்கு வேறு நீதியா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.  

தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் தங்கசாமியின் என்பவர்  விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவரின் மரணத்திற்கு நீதிகேட்டும், உடலை வாங்க மறுத்தும் அவரது குடும்பத்தினர் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக போராடிவருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலங்கடத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு பொறுப்பேற்றது முதல் அடுத்தடுத்து காவல்நிலைய மரணங்கள் தொடர்ந்து வருவது அரச பயங்கரவாதத்தின் உச்சமாகும். தங்கசாமி எத்தகைய கடுமையான குற்றம் புரிந்திருந்தாலும் சட்டப்படி, நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டணையைப் பெற்று தந்திருக்க வேண்டும். அதனை விடுத்து விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரே அடித்துக் கொன்றிருப்பது கொடுங்கோன்மையாகும் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? இல்லை மன்னராட்சியா? என கேள்வி எழுப்பியுள்ள அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறையின் அத்துமீறிய கைதிற்கு எதிராக கொதித்தெழுந்து, அடக்குமுறையை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தும் திமுக அரசு, தங்கசாமியின் படுகொலைக்கு என்ன பதில் கூறப்போகிறது? அமைச்சருக்கு ஒரு நீதி? சாமானிய மக்களுக்கு வேறு நீதியா? என வினவியுள்ளார்.

மேலும், தங்கசாமி மதுபானம் விற்றதற்காக கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்றால், மதுபானத்தை நாள்தோறும் மொத்தமாக விற்கும் தமிழ்நாடு அரசுக்கு என்ன தண்டனை கொடுப்பது? எனவும்  உடற்கூராய்வில் தங்கசாமி உடலில் காயங்கள் இருந்துள்ளதும், கடுமையாக தாக்கப்பபட்டு உயிரிழந்திருப்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்புடைய காவலர்கள் மீது திமுக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க மறுத்து அமைதி காப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து, விசாரணை மரணங்களைக் குறைக்க வேண்டும் என்று முதலமைச்சரே நேரடியாக அறிவுறுத்திய பிறகும், காவல்நிலைய மரணங்கள் தொடர்வது காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே உறுதிப்படுத்துகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

திருவல்லிக்கேணி விக்னேசு, முதுகுளத்தூர் மணிகண்டன், விக்கிரமங்கலம் விவசாயி செம்புலிங்கம், செங்கல்பட்டு சிறுவன் கோகுல்ஸ்ரீ, திருவண்ணாமலை பழங்குடி தங்கமணி, அருப்புக்கோட்டை தங்கபாண்டியன் தற்போது புளியங்குடி தங்கசாமி என்று காவல் மரணங்களை பட்டியலிட்டுள்ள அவர்  இன்னும் எத்தனை பேரின் பச்சைப்படுகொலைக்கு திமுக அரசு துணைநிற்கப்போகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இனியும் காலங்கடத்தாமல்  புளியங்குடி தங்கசாமியின் படுகொலைக்கு காரணமான காவலர்கள் மீது உடனடியாக கொலை வழக்கினைப் பதிந்து கைது செய்வதுடன், விரைவான, நியாயமான நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.