தமிழ்நாடு

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு... நாளை சென்னை உயர் நீதி மன்றம் தீர்ப்பு!!

Malaimurasu Seithigal TV

வாச்சாத்தியில் மலை கிராம மக்கள் மீதான வன்முறை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வரும் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கிறது.

தர்மபுரி மாவட்டம், வாசாத்தி மலைக்கிராமத்தில் சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த கிராமத்தில் உள்ள இளம் பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கை விசாரித்து, 4 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்பட வனத்துறையினர்,  காவல்துறை, வருவாய் துறையினர் என்று 215 பேர் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றச்சாட்டப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டனர். மீதமுள்ளவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 

இந்த வழக்குகளை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்து வந்தார். மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபிநாத், ஜான் சத்தியன், ரமேஷ் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர். 

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். மேலும்,சம்பவம் நடந்த வாச்சாத்தி மலை கிராமத்தில் நேரிடையாகவும் சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் ஒரு வெள்ளிக்கிழமை நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளிக்கிறார்.