தமிழ்நாடு

"ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தடியடி நடத்த உத்தரவிட்டது ஓ.பி.எஸ்.தான்"  உண்மையை போட்டுடைத்த ஜெயக்குமார்..!

Malaimurasu Seithigal TV

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மெரினா கடற்கரையில் போராடிய மக்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்டது ஓ.பி.எஸ்.தான்  என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.

வருகிற 22ஆம் தேதி தமிழகத்தில் கள்ளச்சாராயம் மரணம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது தொடர்பாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் சென்னை சின்ன மலையில் இருந்து பேரணியாக சென்று தமிழ்நாடு ஆளுநரிடம் மனு அளிக்கின்றனர். இதற்காக பாதுகாப்பு அளிக்க கோரி அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வரும் 22 ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பேரணியாக அதிமுக நிர்வாகிகள் சேர்ந்து கிண்டி சின்னமலை அருகில் பேரணியாக புறப்பட்டு ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக எடுத்த தொடர் சட்ட நடவடிக்கை காரணமாக தான் தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டுக்கு எந்த  இடையூறும் இல்லாமல் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு நாயகன் என்று தன்னைத் தானே சொல்லிக் கொள்ளும் ஓ பி எஸ் இதனை யோசித்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் மெரினாவில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தில் ஓபிஎஸ் க்கு வரலாற்றில் பெயர் இருக்க வேண்டும் என்ற ஆசையில் போராட்டத்தை ஒடுக்க காவல் துறையினரை ஏவி விட்டு முழுமையாக தடியடி நடத்த செய்தார். இதில் நடுக்குப்பம், நொச்சிக்குப்பம் மீனவர்கள் அதிகம் தடியடிக்கு ஆளாகினர்.  இவர் முதலமைச்சராக இருந்த போது குடியரசு விழா நடக்க வேண்டும் என்று போலீசாரை ஏவி விட்டு தடியடி நடத்தினார். இவர் ஜல்லிக்கட்டு நாயகனா? என்று கேள்வி எழுப்பினர். மேலும், உண்மையை மறைக்க தனக்கு தானே ஜல்லிக்கட்டு நாயகன் என்று சொல்லிக் கொள்கிறார் என குற்றம் சுமத்தினார்.