தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு...!

Tamil Selvi Selvakumar

ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அரசின் உத்தரவுகளை மீறினால் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கான நெறிமுறைகள்:

தைப்பொங்கலை முன்னிட்டு வருடந்தோறும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தமிழக அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றி தான் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. 

அதன்படி, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், கால்நடை வதைத்தடுப்பு விதிகளை பின்பற்றி போட்டிகளை நடத்துபவர்களுக்கு மட்டுமே மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி அளிக்க வேண்டும் எனவும், விளையாட்டுக்கான காளை வருவதில் இருந்து, போட்டி முடிந்து செல்லும் வரை வீடியோ படம் எடுக்கப்பட வேண்டும் எனவும், அரசு பட்டியலிட்ட இடங்களில் மட்டுமே போட்டி நடத்தப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, விதிகளின்படி விளையாட்டு நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், காளையின் உரிமையாளரும், உதவியாளரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதோடு ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு விளையாட்டுகளில் 300 வீரர்களும், எருது விடும் விழாவுக்கு 150 வீரர்களும் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ள தமிழக அரசு, பார்வையாளர்கள் பகுதியில் உள்ள இருக்கையின் எண்ணிக்கைக்கு பாதி பேர் அனுமதிக்கப்படலாம் எனவும், அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.