சென்னையில், அசோக் ரெசிடென்சி மற்றும் ஆதித்யா ராம் குழுமம் உள்ளிட்ட நான்கு நிறுவனங்களுக்கு சொந்தமான 20-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் இன்று காலை முதலே சுமார் 20-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக, அண்ணா நகரில் உள்ள அசோக் ரெசிடென்சி நிறுவனத்தின் உரிமையாளர் அசோக்-கின் வீட்டிலும், பனையூரில் உள்ள ஆதித்ய ராம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அலுவலகத்திலும் காலை முதலே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல் ஐயப்பன்தாங்கலில் உள்ள அசோக் ரெசிடென்சியின் விடுதியிலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டுகளில் மிகப்பெரிய நிறுவனங்களான அசோக் ரெசிடென்சி, ஆதித்ய ராம் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்ததாகவும், இதன் காரணமாகவே அந்த நிறுவனங்களில் சோதனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர சில ஹாஸ்பிடாலிட்டி குழுமங்கள், ஓட்டல்கள் நடத்தும் குழும நிறுவனத்திலும் ரெய்டு நடந்து வருகிறது. இதில் பல்வேறு ஓட்டல்களை நிர்வகித்து வரும் நிறுவனத்தின் மீது தான் அதிக புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி ரெய்டு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 60க்கும் அதிகமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.