தமிழ்நாடு

"காவல்துறை தமிழ்நாடு அரசின் கைகளில் இருக்கிறதா... என்.ஐ.ஏ கைகளில் இருக்கிறதா?" நெல்லை முபாரக் கேள்வி!

Malaimurasu Seithigal TV

வழக்கறிஞர் முகமது அப்பாஸ் விவகாரத்தில் காவல்துறை, தமிழ்நாடு அரசின் கைகளில் இருக்கிறதா என்ஐஏ கைகளில் இருக்கிறதா என நெல்லை முபாரக் கேள்வி எழுப்பியுள்ளார்.

எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் நெல்லையில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மூன்று மாதங்களைக் கடந்து மணிப்பூர் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து அரியானா மாநிலத்திலும் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் கலவரம் பற்றி எரிகிறது. நிர்வாக சீர்கேடு மோசமாகி இருக்கிறது. உலக அரங்கில் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்படுத்தியிருக்கிற ஒன்றிய அரசின் பிரதமர் பதவி விலக வேண்டும். மணிப்பூர் கலவரம் பற்றி விவாதிக்க வருகை தராத பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பை மீறி பல்வேறு சட்டங்களை நிறைவேற்றி வருகிறது என தெரிவித்தார்.

குறிப்பாக வன சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதனால் தனியார் நிறுவனங்கள் எவ்விதமான அனுமதியும் இன்றி கட்டுமான பணிகளை வன பகுதிகளில் மேற்கொள்ள ஒன்றிய அரசு துணை போவது தவறானதாகும். என்எல்சி விவகாரத்தில் அதிமுகவை போன்று திமுகவும் நடந்து கொள்கிறது. என்எல்சி விரிவாக்கத்திற்கான நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் எனக் கோரினார்.

மேலும், வருகிற செப்டம்பர் 15 அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக எந்த முஸ்லிம் சிறைவாசிகளும் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படவில்லை. நாங்கள் குறிப்பிடும் 37 ஆயிரம் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். இதுதொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

என் ஐ ஏ கைது செய்யப்பட்டு பின்பு நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை ஆகி இருக்கக்கூடிய மதுரை வழக்கறிஞர் அப்பாஸ் மீது அழுத்தத்தின் காரணமாக மீண்டும் காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்துள்ளது. தமிழக அரசின் காவல்துறை தமிழ்நாடு அரசின் கைகளில் இருக்கிறதா என்ஐஏ கைகளில் இருக்கிறதா என தெரியவில்லை. சிபிஐ போன்று என் ஐ ஏவும் அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டில் வர முடியாதபடி செய்ய வேண்டும் பாஜகவின் "என் மண். என் மக்கள்" பாதயாத்திரை மூலம் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு பயணமாகிறார்கள்.  மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் இந்த பாதயாத்திரையை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் எனக் கூறினார்.

சிறுபான்மையினர் குறித்து சீமானின் கருத்து அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. 18 சதவிகிதம் சிறுபான்மையினர் வாக்களித்து தான் திமுகவும் காங்கிரஸும் வெற்றி பெற்றார்கள் என்பது உண்மைதான். மீதம் இருக்கக்கூடிய 82 சதவிகிதம் மக்களை நோக்கி சீமான் ஏன் இந்த கேள்வியை கேட்கவில்லை. இப்படி ஒரு கருத்தை அவரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. சிறுபான்மையினர் குறித்து சீமான் பேசிய கருத்துக்களை திரும்ப பெற வேண்டும். இந்தியா முழுவதும் ஒரு வருடத்திற்கு 780 கலவரங்கள் நடக்கிறது என்று புள்ளி விவரங்கள் சொல்லுகிறது. அப்படி இருக்கும்போது சீமானின் கருத்து வேதனை தருகிறது. எரிகிற புண்ணில் எண்ணெய் ஊற்றுவது போன்று இருக்கிறது என்று தெரிவித்தார்.