தமிழ்நாடு

மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் கடிதம்...!

Tamil Selvi Selvakumar

பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்துக்கு புறம்பானது என கூறியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, விளக்கம் கேட்டு தமிழக தலைமை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஆளுநர் பரிந்துரை:

தமிழ்நாட்டிலுள்ள 13 அரசு பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் இருந்து வருகிறார். அதன்படி இந்த பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. அப்படி துணை வேந்தரை தேர்வு செய்வதற்கு பல்கலக்கழகங்களின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் தலா ஒருவரும், ஆளுநர் சார்பில் ஒரு பிரதிநிதி என மொத்தம் 3 பேர் நியமிக்கப்படுவார்கள். முதலில் இந்த பதவிக்காக விண்ணப்பித்தவர்களின் கல்வித்தகுதி, அனுபவம் உள்ளிட்ட பல்வேறு தகுதிகளை ஆய்வு செய்த பின்னரே, அதிலிருந்து 3 பேரை தேர்வு செய்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யபடும். தேர்வு செய்யப்பட்ட 3 பேர்களில் ஒருவரை ஆளுநர் பல்கலைக் கழக துணை வேந்தராக தேர்வு செய்வார்.

2 மசோதாக்கள்:

இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்த தமிழ்நாடு அரசு, ”தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் என்றும், தேவைப்பட்டால் துணைவேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் 2 மசோதாக்களை” கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி தமிழக சட்ட மன்றத்தில் கொண்டு வரப்பட்டது. இது குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் கருத்தை ஆளுநர் சரியாக கலந்து ஆலோசிக்கவில்லை என்பதால், இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டதாக கூறினார். மேலும் இந்த மசோதாவிற்கு பாஜக தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் ஒரு மனதாக ஆதரவு அளித்ததால், இந்த சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆளுநர் கடிதம்:

ஆனால், கடந்த 4 மாதங்களாக இந்த மசோதா தொடர்பாக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமலும் இருந்து வந்தார். இந்நிலையில் துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சூழலில், மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு தலைமைச் செயலாளருக்கு ஆளுநர் கடிதம் எழுதி உள்ளார். அதில் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது என்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்துக்கு புறம்பானது என்றும், அரசியல் தலையீட்டுக்கு வழிவகுப்பதாகவும் கூறி சில விளக்கங்கள் அளிக்க வேண்டும் என ஆளுநர் தமிழக தலைமைச் செயலாளரிடம் கடிதம் எழுதி வலியுறுத்தியுள்ளார்.