தமிழ்நாடு

சென்னையில் சர்வதேச தரத்திலான பாக்ஸிங் அகாடமி...? உதயநிதி பதில்..!

Malaimurasu Seithigal TV

சென்னையில் சர்வதேச தரத்திலான பாக்ஸிங் அகாடமி அமைப்பது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ வாக இருந்த உதயநிதி, டிசம்பர் 14 ஆம் தேதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடி மாநகர தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பொதுகூட்டம் ஆவடியில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட அவர், திருநங்கைகள், பெண்களுக்கு தையல் மிஷின் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

பின்னர் அந்த நிகழ்சியில் பேசிய அவர், “எத்தனையோ பதவிகள் அல்ல பொறுப்புகள் வரலாம் போகலாம். ஆனால் தங்களின் செல்லப்பிள்ளையாகத்தான் நான் இருப்பேன். தற்போது அமைச்சராக இருப்பதால் இருக்கும் பணிகளை சரியாக செய்ய வேண்டிய கடமை உள்ளது. ஆவடியில் விளையாட்டு மைதானம் வேண்டும் என்று அமைச்சர் நாசர் கோரிக்கை விடுத்தார். அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்” என கூறியிருந்தார். 

இந்நிலையில், தலைமை செயலகத்தில் அமைச்சர் உதயநிதியை சந்தித்த ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ எழிலன் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ஆயிரம் விளக்கு தொகுதி இளைஞர்கள் பயனடையும் வகையில், விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பாக கோபாலபுரத்தில் கலைஞர் பெயரில் சர்வதேச தரத்திலான பாக்ஸிங் அகாடமி அமைப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அமைச்சர், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ எழிலனின் கோரிக்கையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.