தமிழ்நாடு

அமலாக்கத்துறை கஸ்டடியில் செந்தில் பாலாஜி... விடிய விடிய விசாரணை!!

Malaimurasu Seithigal TV

மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. இதை எதிர்த்து அவரது மனைவி மேலகா தொடர்ந்த வழக்கில், 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதை அடுத்து, மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என அவர் தீர்ப்பு வழங்கியதை அடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

மேலும், செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகவும் அறிவுறுத்தியது.

இதனையடுத்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அவர் காணொலி மூலம் விசாரணை மேற்கொண்டார். 

அப்போது, காலில் காயம் இருப்பதால் ஒரு நாளைக்கு இரண்டு முறை காவேரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, செந்தில் பாலாஜியின் உடல் நிலை கருத்தில் கொள்ளப்படும் என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.  

இதனை அடுத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதுசம்பந்தமாக வேறு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்ற நீதிபதி அல்லி, ஆகஸ்ட் 12-ஆம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். 

இதனை தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கக்கூடிய ஆவணங்களுடன் புழல் சிறைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் நேரில் சென்றனர். இதன் பின்னர், புழல் சிறையில் இருந்து மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு இரவு 9.30 மணி அளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விடிய விடிய அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.