தமிழ்நாடு

'இரவில் கழிவுநீரை ஆற்றில் கலக்கும் சாய ஆலையில்' ஆட்சியர் ஆய்வு !

Malaimurasu Seithigal TV

நாமக்கல் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் சாயகழிவு நீர் கலப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா சாய சலவை ஆலைகளில் தீடிரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையம், குமார பாளையம் சுற்றுவட்டார பகுதியில் பிரதான தொழிலாக விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் உள்ளது. இந்த தொழிலை சார்ந்து 100க்கும் மேற்பட்ட சாயசலவை ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

இதையடுத்து இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு இல்லாத ஆலைகள் அவ்வபோது இரவு நேரங்களில் சாக்கடை கால்வாய் மற்றும் குழாய் மூலம் நேரடியாக சாய கழிவுநீரை காவிரி ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் வெளியேற்றுவதால் குடிநீர் விநியோகம் செய்வதில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. இது குறித்த புகார் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு சென்ற நிலையில் புதிதாக பொறுப்பு ஏற்ற மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் தண்ணீர்தரம் குறித்து பரிசோதனை செய்தனர்.

இதன் பின்னர் காவிரி ஆற்றில் சாய கழிவு நீர் கலப்பது தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவர்களிடம் கேட்டறிந்தார். இதன் பின்னர் வசந்தா நகர் பகுதியில் இயங்கி வரும் சாய ஆலைகளில் தீடிரென ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் உமா, நூல் கோண்களுக்கு சாயம் ஏற்றுவது குறித்தும் உரிய விதிமுறைகள் பின்பற்றபடுகிறதா? என்பன குறித்து ஆய்வு நடத்தினார். மேலும், சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து, ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காத அலுவலர்களை எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை எடுக்கவில்லையெனில் துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.