தமிழ்நாடு

"நமக்கு எண்ணிலடங்கா பணிகள் காத்திருக்கின்றன" அமைச்சர் உதயநிதி அறிவுரை!

Tamil Selvi Selvakumar

நமக்கு இயக்கப் பணி, மக்கள் பணி என எண்ணிலடங்கா பணிகள் காத்திருக்கின்றன என திமுக இளைஞரணி செயலாளரும் விளையாடுட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசிய உரை தற்போது மிகுந்த சர்ச்சையாகியுள்ளது. அமைச்சர் உதயநிதி மீது வட மாநிலங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. அவரது தலையை வெட்டிக் கொண்டு வருபவர்களுக்கு ரூபாய் 10 கோடி வழங்கப்படும் என உத்திரப் பிரதேச சாமியார் ஒருவர் அறிவித்துள்ளார். மேலும் அமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், திமுகவினர் இவற்றிற்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என்றும்  நமக்கு இயக்கப் பணி, மக்கள் பணி என எண்ணிலடங்கா பணிகள் காத்திருக்கின்றன என்றும் அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தியுள்ளார். 

இதுத் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்-கலைஞர்கள் சங்கம்’கடந்த 2-ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த ‘சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினேன்.

‘கடந்த 9 ஆண்டுகளாக வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருக்கிறீர்களே. எங்களின் நலனுக்காகச் செய்த திட்டங்கள் என்ன’ என்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஓரணியில் திரண்டு நின்று, நிராயுதபாணியாக நிற்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசைக் கேள்வி கேட்க தொடங்கியுள்ள நிலையில், த.மு.எ.க.ச மாநாட்டில் நான் பேசிய பேச்சை, ‘இனப்படுகொலை செய்யத் தூண்டினேன்’ என்று திரித்து அதையே மக்களிடம் இருந்து தங்களைக் காத்துக்கொள்ளும் ஆயுதமாக நினைத்து காற்றில் கம்பு சுற்றிக்கொண்டு இருக்கின்றனர் பா.ஜ.க. தலைவர்கள். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அமித்ஷா போன்ற ஒன்றிய அரசின் அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் என யார்யாரோ இந்த அவதூறை மையமாக வைத்து, என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். 

நியாயமாகப் பார்த்தால், மதிப்புக்குரிய பொறுப்பில் இருந்துகொண்டு அவதூறு பரப்பும் இவர்கள் மீது நான்தான் கிரிமினல் வழக்கு, நீதிமன்ற வழக்குகளைத் தொடுக்க வேண்டும். ஆனால், இவர்களுக்குப் பிழைப்பே இதுதான், இதைவிட்டால், பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியாது என்பதால், ‘பிழைத்துப் போகட்டும்’ என்று விட்டுவிட்டேன்" என தெரிவித்துள்ளார். 

 "...எதையும் புரிந்துகொள்ள விரும்பாமல், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட் கோவை பார்க்கும்போது ஒரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது. ‘சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா’ என திரைப்பட நடிகர் அண்ணன் வடிவேலு அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்திடம் போட்டி போடும் அளவுக்கு மோடி அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்துள்ளார். இடையிடையே பணத்தை மதிப்பிழக்கச் செய்வது, குடிசைகளை மறைத்து சுவர் எழுப்புவது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவது, அங்கு செங்கோல் நடுவது, நாட்டின் பெயரை மாற்றி விளையாடுவது, எல்லையில் நின்றபடி வெள்ளைக்கொடிக்கு வேலை வைப்பது… என வடிவேலு அண்ணனின் `23-ஆம் புலிகேசி’ கதாபாத்திரத்தோடு போட்டிபோட்டு நகைச்சுவை செய்துகொண்டுள்ளார். 

திரையில் வடிவேலு அண்ணனை ரசிக்க முடிந்தது. நிஜத்தில் இவர்களை… மக்களின் வாக்குகளைப் பெற எந்தளவுக்கும் சென்று, இவர்கள் நாடக அரசியலைச் செய்வார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது" என குறிப்பிட்டுள்ளார். 

தொடர்ந்து, ஏழை எளிய மக்களின் வாழ்வை உயர்த்தும் ‘புதுமைப்பெண்’ திட்டம் போன்றோ, முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டி திட்டம் போன்றோ, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்றோ ஏதாவது ஒரு முற்போக்குத் திட்டம் கடந்த 9 ஆண்டுகால ஒன்றிய அரசிடம் இருந்து வந்திருக்கிறதா? மதுரை எய்ம்ஸை கட்டினார்களா? கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைப் போன்று ஏதாவது அறிவியக்கத்தை முன்னெடுத்தார்களா? என கேள்வி எழுப்பியுள்ள அவர், ‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கொடநாடு கொலை-கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒழிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.  

சாமியார்களுக்குத்தான் இந்தக் காலத்தில் அதிக விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படி ஒரு சாமியார் இடையில் புகுந்து என் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்துள்ளார். என் தலையைவிட ‘முற்றும் துறந்தவரிடம் எப்படி 10 கோடி’ என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் உதயநிதி இந்த நிலையில், ‘கொலை மிரட்டல் விடுத்த அந்தச் சாமியாரை கைது செய்ய வேண்டும்’ என்று கோரி நம் கழகத்தினர் தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து வருவதாகவும், அந்தச் சாமியாரின் உருவ பொம்மையை எரிப்பது, அவரின் படத்தைக் கொளுத்துவது, கண்டன சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது என கூறியுள்ளார்.

மேலும், நாம் பிறருக்கு நாகரிகம் கற்றுத் தருபவர்கள். நம் தலைவர்கள் நம்மை அப்படித்தான் வளர்த்தெடுத்துள்ளனர். எனவே, அதுபோன்ற காரியங்களை நம் இயக்கத் தோழர்கள் அறவே தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தவிர, நமக்கு இயக்கப் பணி, மக்கள் பணி என எண்ணிலடங்கா பணிகள் காத்திருக்கின்றன என அறிவுறுத்தியுள்ளார்.