தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 3-ம் தேதி புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மசூலிப்பட்டினத்திற்கு 940 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, வலுப்பெற்றுள்ளதாகவும், இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 3-ம் தேதி புயலாக மாறக் கூடும் என்றும் தெரிவித்தார். இந்த புயல் சின்னம் 4-ம் தேதி சென்னைக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் என்றும் தெரிவித்தார்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, வட கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார். தொடர்ந்து, டிசம்பர் 3 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவித்தார்.