தமிழ்நாடு

காலை உணவுத் திட்டத்தால் அதிகரித்த வருகைப் பதிவேடு...!!!

Malaimurasu Seithigal TV

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் அரசுப்பள்ளிகளில் மாணவர் வருகை உயர்ந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நடப்பு கல்வியாண்டின் (2022-2023) தொடக்கத்தில் அரசுப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

முதற்கட்டமாக 1,543 பள்ளிகளில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் சூழலில், 1,319 பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தால் மாணவர்களின் தினசரி வருகை 40% அளவுக்கு அதிகரித்திருப்பதாக மாநில திட்டக்குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை உணவுத் திட்டம் செயல்பாட்டில் உள்ள திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் 100% மாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்கு வந்து செல்வதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல் திட்டம் அமலில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 98.5%, கரூரில் 97.4%, நீலகிரியில் 96.8% என்ற அளவுக்கு மாணவர்களின் வருகை பதிவாகியுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் 1,086 பள்ளிகளில் 20% அளவுக்கும், 22 பள்ளிகளில் 40% அளவுக்கு கடந்த 2022-ம் ஆண்டின் ஜூன், ஜூலை மாதங்களை ஒப்பிடுகையில் 2023-ம் ஆண்டின் ஜனவரி, பிப்ரவரியில் வருகை அதிகரித்திருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

காலை உணவுத் திட்டத்தால் தினந்தோறும் சராசரியாக 1.48 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருவதாகவும், பள்ளிகளில் வருகைப் பதிவேடு அதிகரித்துள்ளதாகவும் மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தாக்கல் செய்த அறிக்கையில் பதிவாகியுள்ளது.