கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.
மே மாதத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி நீர் தேக்கம் உள்ளிட்ட ஏரிகளில் நீர் இருப்பு குறைந்து வந்தது.
இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியில், மழைக்கு முன்பாக 2 ஆயிரத்து 307 மில்லியன் கன அடியாக இருந்த நீர் இருப்பு, தற்போது 2 ஆயிரத்து 584 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க : நாடாளுமன்ற தேர்தலை ஓர் அணியில் எதிர்கொள்ள முடிவு? கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்!
இதேபோன்று புழல் ஏரியில் மழைக்கு முன்பாக, 2 ஆயிரத்து 178 மில்லியன் கனஅடியாக இருந்த நீர் இருப்பு தற்போது 2 ஆயிரத்து 246 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது.
பூண்டி நீர் தேக்கத்தில் மழைக்கு முன்பாக, 1,266 மில்லியன் கனஅடியாக இருந்த நீர் இருப்பு, கடந்த சில நாட்களில் 1,347 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது. இப்படியாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், வீராணம் உள்ளிட்ட ஏரிகளில் தற்போது, மொத்தம் 7 புள்ளி 8 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளதால், சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் சிக்கல் இருக்காது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர் .