தமிழ்நாடு

2022-23 ம் நிதியாண்டில் வருமான வரி வசூல் 3000 கோடி அதிகரித்துள்ளது -வருமான வரித்துறை தலைமை ஆணையர்

Malaimurasu Seithigal TV

2023-24 ம் நிதியாண்டில் 20% கூடுதல் வரி வசூல் செய்ய இலக்கு. வரி ஏய்ப்பு செய்த 7 பேர் சிறைக்கு சென்றுள்ளனர்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு,புதுச்சேரி மாநிலத்திற்கான வருமான வரித்துறை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

தமிழகம் புதுச்சேரியில் 2022-23 ம் நிதியாண்டில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து கோடி வருமான வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.கடந்த நிதி ஆண்டை விட 2022-23 ம் நிதி ஆண்டில் வரி வசூல் 3000 கோடி அதிகமாக உள்ளது.தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளது.இந்திய அளவில் 18 சதவீதம் வளர்ச்சியும் தமிழகம்,புதுச்சேரியில் 20 சதவீதமும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

2023-24 ம் நிதி ஆண்டில் 20 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயத்துள்ளோம்.2022-23 ம் நிதி ஆண்டில் வரி ஏய்ப்பு செய்தவர்கள் 7 பேர் சட்டப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு ஆண்டில் 7 நபர்கள் வரி ஏய்ப்பு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டது கிடையாது இதுவே முதல் முறையாகும். TDS குறித்த கையேடு முதல் முறையாக தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. இணையதளத்திலும் இதன் நகல் வெளியிடப்படும். இதற்கான காணொளியும் youtube இல் பார்க்கலாம்.

காரைக்குடியில் 100 ஆண்டு பழமையான வருமானவரித்துறை அலுவலகம் உள்ளது காரைக்குடி அலுவலகம் இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.காரைக்குடியில் அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.100 ஆண்டுகளுக்கு முன்பு ஓலைச்சுவடியில் வருமான வரி கணக்குகள் கையாண்டதை காரைக்குடி அருங்காட்சியகத்தில் வைப்பதற்கு திட்டமிட்டுள்ளோம்.

வருமான வரியை சரியாக செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்பவர்களை கண்டுபிடிப்பது முன்னர் சவாலாக இருந்தது.ஆனால் இப்போது சுலபமாக கண்டுபிடித்து விடுவோம்.30 லட்சத்திற்கு மேல் இடம் வாங்கினால்,10 லட்சத்திற்கு மேல் வங்கி கணக்கில் வைத்திருந்தால் 2 லட்சத்திற்கு மேல் பொருட்கள் வாங்கினால்  கண்காணிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்