தமிழ்நாடு

கட்டபொம்மன், மருது பாண்டியர்கள், வ.உ.சி.சிலைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

Tamil Selvi Selvakumar

சென்னை காந்தி மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர்கள் மற்றும் வ.உ.சி.சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

சென்னை காந்தி மண்டபத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மருது பாண்டியர்கள் சிலைகளும், 18 லட்சம் ரூபாய் செலவில் வீர பாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலையும், 43 லட்சம் மதிப்பில் கோவை சிறையில் வ.உ. சிதம்பரனார் இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கு மற்றும் வ.உ.சி. சிலை அமைக்கப்பட்டன. பணிகள் நிறைவடைந்த நிலையில், சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புதிய சிலைகளைத் திறந்து வைத்தார். 

பின்னர் சிலைகளின் கீழ் வைக்கப்பட்ட புகைப்படங்களுக்கு  மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர், வ.உ.சி.இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கை பார்வையிட்டார். இந்நிகழ்சியில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், பொன்முடி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூரியில் தியாகிகள் நினைவு மண்டபத்தினை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார். 

இதேபோன்று, பொள்ளாச்சியில், வி.கே.பழனிசாமி, சி.சுப்பிரமணியம்  மற்றும் பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோரின் சிலைகள், மற்றும் அரங்கம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். 

மேலும், சுதந்திரப் போராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி, எத்தலப்பரின் நினைவாக உடுமலைப்பேட்டையில் அமைக்கப்படவுள்ள திருவுருவச் சிலை மற்றும் அரங்கத்திற்கும் அடிக்கல் நாட்டி பணிகளைத்தொடங்கி வைத்தார்.