தமிழ்நாடு

அதிமுக ஆட்சியில் ஒப்பந்தக்காரர்களால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு.! தணிக்கை குழு குற்றச்சாட்டு.!  

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் ஒப்பந்தக்காரர்கள் பயனடையும் வகையில் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு  ஏற்பட்டுள்ளதாக தலைமைக் கணக்குத் தணிக்கை குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில், தமிழகத்தின் நிதிநிலை தொடர்பான தலைமைக் கணக்குத் தணிக்கை குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கடந்த அதிமுக ஆட்சியில் ஒப்பந்தக்காரர்கள் பயனடையும் வகையிலும், கூடுதல் மற்றும் வீணான செலவினங்களின் மூலமும் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாக சுட்டுக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம், மதுபான நிறுவனம், தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கழகம், பயோ பார்க் மற்றும் சிமென்ட் கார்ப்பரேஷன் ஆகிய துறைகளில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு மற்றும் வீண் விரயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் டாஸ்மாக் பார்களின்  ஒப்பந்த காலத்திற்கு மேல் உரிம காலம் நீட்டிக்கப்பட்டால், உரிமக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வரையறை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும், இதன் விளைவாக அரசுக்கு  ஆயிரத்து 866 கோடி ரூபாயும், டாஸ்மாக்கிற்கு ஏஜென்சி கமிஷனாக 19 லட்சம் ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேலும் வீண் விரையமாக தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தின் பயோ பார்க் திட்டத்தின் கீழ், ஆய்வக உபகரணங்களை கையாளுவதற்கு தேவையான பணியாளர்களை பணியமர்த்தாமல் உபகரணங்களை மட்டும் கொள்முதல் செய்ததன் விளைவாக ஆயிரத்து 732 கோடி மதிப்புள்ள ஆய்வக உபகரணங்கள் செயலற்றுகிடப்பத்தாகவும், டி.என். சிமென்ட்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு அனுமதியளித்ததன் விளைவாக 4.49 கோடி கடன் நிலுவை தொகை மீட்டெடுக்க வழியின்றி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் தேவையில்லாத கட்டணங்களின் வாயிலாக சுமார் 75 லட்சம் இழப்பு ஏற்பட்டதாகவும், நிலக்கரி துறையை பொறுத்தவரை மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி போக்குவரத்தில் ஏற்பட்ட குறைப்பாட்டால் இழப்புகளை சந்தித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.