அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கைப்பற்றப்பட்ட 60 சொத்து ஆவணங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை மேற்கொண்டனர்.
சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் கைது செய்தது. இதனை எதிர்த்து அவரது மனைவி மேலகா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், வழக்கு தொடர்பாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை அணுகவும் அறிவுறுத்தியது.
அதன்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் காணொலி மூலம் நடைபெற்ற விசாரணையின் இறுதியில், வரும் 12-ஆம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும், விசாரணையின் போது செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.
இதனை தொடர்ந்து, சென்னை புழல் சிறையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி திங்கட்கிழமை இரவு 9.30 மணி அளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நள்ளிரவு வரை விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், காலை 6 மணிக்கு அதிகாரிகள் மீண்டும் விசாரணையை தொடங்கினர்.
அப்போது, ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட 60 சொத்து ஆவணங்கள் குறித்து செந்தில் பாலாஜியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கணக்கில் வராத 22 லட்சம் ரூபாய், பினாமிகள் மற்றும் நிலங்கள் வாங்குவற்கு எங்கிருந்து பணம் வந்தது என்பன போன்ற கேள்விகளை அதிகாரிகள் முன்வைத்ததாக கூறப்படுகிறது.
மேலும், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் 4 முறை சம்மன் அளித்தும் நேரில் ஆஜராகாதது ஏன் என்றும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.