தமிழ்நாடு

போலீசில் வேலை செய்தால் பித்தளைதான் வாங்க முடியும், ஆனால் .... எம்ஆர்கே பன்னீர்செல்வம்!!!

Malaimurasu Seithigal TV

சிதம்பரத்தில் செவித்திறன் குறையுடையோர் பள்ளி ஆண்டு விழாவில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பங்கேற்றபோது பாஜக தலைவர் அண்ணாமலை பப்ளிசிட்டிக்காகத்தான் குற்றம் சாட்டுவதாக தெரிவித்துள்ளார்.

33வது ஆண்டு விழா:

சிதம்பரத்தில் உள்ள ஜீ.வி மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி, சுசிலா செவித்திறன் குறையுடையோர் பள்ளி, ஜீ.வி மாற்றுத்திறனாளிகள் தொழிற் பயிற்சி மையம் மற்றும் மருத்துவர் அரங்கசாமி தசைப் பயிற்சி மையம் ஆகியவற்றின் 33வது ஆண்டு விழா சிதம்பரத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார்.  பின்னர் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். 

பப்ளிடிட்டிக்காகவே..:

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், அண்ணாமலை அரசியல் செய்வதற்காக ஊழல் பட்டியல் எனக் கூறி வெளியிடுகிறார் எனவும் ஆனால் அவரே ஒரு சிக்கலில் மாட்டியிருப்பதாக தகவல் இருக்கிறது எனக் கூறியவர் அதை மறைப்பதற்காக இந்த கதையை விடுகிறார் எனத் தெரிவித்தார்.  மேலும் திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால் அதிமுக 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தார்கள் எனவும் அண்ணாமலை ஏன் அவர்களது ஊழல் பட்டியலை வெளியிடவில்லை எனவும் எதை வைத்து ஊழல் பட்டியல் எனக் கூறுகிறார் என்பது தெரியவில்லை எனவும் தெரிவித்த அவர் எதற்குமே ஒரு அடிப்படை ஆதாரம் வேண்டும் எனவும் பப்ளிசிட்டிக்காகத்தான் இதுபோன்ற வேலைகளை அவர் செய்கிறார் எனவும் கூறினார்.

சட்டரீதியாக..:

தொடர்ந்து பேசிய அவர், அவரது கதைதான் சிந்துபாத் கதையைப்போல அதிகமாக வந்து கொண்டிருக்கிறது எனவும் இதை நாங்கள் சொன்னால் அரசியல் என்பார்கள் எனவும் கூறிய அமைச்சர் அவர்களது கட்சிக்காரர்களே அண்ணாமலையைப் பற்றி சொல்கிறார்கள் எனவும் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம் எனவும் பேசினார்.  ஆனால் மக்களுக்கு எது உண்மை என தெரியும் எனவும் திமுக அமைப்புச் செயலாளர் சட்டரீதியாக எதிர்கொள்வதாக கூறி இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

போலீஸ் வேலையைப் போல:

அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் பன்னீர் செல்வம், போலீஸ் வேலையைப்போல அரசியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் எனவும் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர், அந்த வேலையை, சம்பளத்தை விட்டுவிட்டு கட்சியில் இணைகிறார் என்றால் அது எந்த நோக்கம் என்பது தெரிய வேண்டும் எனவும் போலீசில் வேலை செய்தால் பித்தளைதான் வாங்க முடியும், ஆனால் கட்சியில் இருந்தால் ஆருத்ரா கோல்ட் வாங்கலாம் எனவும் பேசினார்.  

மேலும் பிரதமர் வந்த நிகழ்ச்சிக்கு கூட அண்ணாமலை வரவில்லை எனவும் எங்கே கட்சியை விட்டு எடுத்து விடுவார்களோ என்பதற்காக இதுபோன்ற சேற்றை அள்ளி பூசுகிறார் எனவும் கூறிய அமைச்சர் உழைப்பின் சிகரமாக முதலமைச்சர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எனவும் அவர் நல்ல ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் எனவும் அண்ணாமலை கூறும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் வேண்டும் எனவும் தெரிவித்தார்.