தமிழ்நாடு

“48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால்...” அண்ணாமலைக்கு எச்சரிக்கை!!

Malaimurasu Seithigal TV

திமுகவினரின் சொத்து பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் என்ற பெயரில் ஆவணங்களை வெளியிட்டார். இதில் திமுக முக்கிய பிரமுகர்களின் சொத்து மதிப்புகள் இடம்பெற்றிருந்தன.  இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி உள்ளிட்ட திமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

அதனைத் தொடர்ந்து, அண்ணாமலை தமது பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு  கேட்க வேண்டும் என்றும் இழப்பீட்டு தொகையாக 500 கோடி தர வேண்டும் என்றும் ஆர் எஸ் பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீசில் தொடர்பில்லாத சொத்துகளையும் உள்ளடக்கி திமுகவின் சொத்து மதிப்பு ஆயிரத்து 409 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பு என்று போலியான குற்றச்சாட்டை சுமத்தியதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இழப்பீட்டுத் தொகையாக 500 கோடி ரூபாய் தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.  இது தவிர, 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் தகுந்த உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒருவர் திமுகவின் உறுப்பினராகவோ நிர்வாகியாகவோ  இருந்தாலும் அவரது சொத்துகள் கட்சியின் சொத்துகளாக மாறாது என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.