இணையச் சூதாட்டங்களுக்கெதிரான சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வரும் ஆளுநரின் செயல் பச்சை சனநாயகப்படுகொலை. நாம் தமிழர் கட்சி தலைவரான சீமான் ஆன்லைன் ரம்மி சட்டம் காலாவதியானதையடுத்து ஆளுநருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையின் சாராம்சம் பற்றி தெளிவாக விரிவாக காணலாம்.
ஆளுநரின் செயல்பாடு:
இணையச் சூதாட்டங்களுக்கெதிராக தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து வரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் எதேச்சதிகாரப்போக்கு அதிர்ச்சியளிக்கிறது.
இணையச் சூதாட்டங்களால் பெரும் பொருளாதாரத்தை இழந்து, பல குடும்பங்கள் நலிவடைந்து, எண்ணற்ற இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்கிற கொடுஞ்சூழல் நிலவுகிற நிலையில், அவ்வகை சூதாட்டங்களுக்கு மொத்தமாகத் தடைவிதிக்கும்பொருட்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் தராது இழுத்தடித்து வரும் ஆளுநரின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
காலாவதியான சட்டம்:
இணையச் சூதாட்டங்களால் உயிர்ப்பலிகள் நடந்தேறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், அதற்கெதிராக அவசரச் சட்டமியற்றப்பட்டு நடைமுறைக்கு வந்து, அச்சட்டத்தை நிலைப்படுத்தும் விதமாக இயற்றப்பட்ட சட்டமுன்வரைவுக்கு, ஆறு மாதமாகியும் ஆளுநர் ஒப்புதல் தராததால் அவசரச்சட்டம் முழுமையாகக் காலாவதியாகியிருக்கிறது.
குடும்பங்கள் சீரழிவு:
இதன்மூலம், இணையச் சூதாட்டங்கள் மீண்டும் தலைதூக்கி, பல குடும்பங்கள் சீரழியும் பேராபத்து நிகழ்ந்தேறும் சூழல் உருவாகியிருக்கிறது. இனியொரு உயிர்ப்பலி ஆனாலும், ஒரு குடும்பம் கடனாளியாகிப் பொருளாதரத்தில் நலிவடைந்தாலும் அதற்கானப் பொறுப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொள்வாரா?
ஜனநாயக படுகொலை:
ஆளுநர் பொறுப்பில் அமர்ந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு வேலைபார்க்கும் ஆர்.என்.ரவி அவர்கள், யாருடைய நலனுக்காக இணையச் சூதாட்டத்துக்கு மறைமுக ஆதரவளிக்கிறார்? அவர் வலியுறுத்தும் சனாதனம் சூதாட்டங்களை ஏற்றுக்கொள்கிறதா? மக்களால் தேர்வுசெய்யப்பட்ட சட்டமன்றத்தின் முடிவை மறுதலிக்கும் ஆளுநரின் அதிகார அத்துமீறல் பச்சை ஜனநாயகப்படுகொலை இல்லையா?
இது மக்களாட்சித் தத்துவத்தையும், கூட்டாட்சிக்கோட்பாட்டையும் கேலிக்கூத்தாக்கும் கொடுஞ்செயல் இல்லையா? தேநீர் செலவு உட்பட ஆளுநர் மாளிகையின் அத்தனை செலவினங்களும் தமிழக மக்களின் வரிப்பணத்திலிருந்துதான் கொடுக்கப்படுகிறது.
டெல்லி ஏகாதிபத்தியமே!!:
தமிழக மக்கள் கொடுத்த வரிப்பொருளாதாரத்தில், மாளிகையில் உண்டு உறங்கிக் கொழுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மக்களின் உயிரைப் பற்றிக் கவலை இல்லையா? அதிகாரத்திமிரிலும், பதவி மமதையிலும் எத்தனை நாளைக்கு ஆட்டம் போடுவீர்கள் ஆளுநரே? அதிகாரப்போதையில் கொடுங்கோன்மை ஆட்சி நிகழ்த்திய பெரும் பெரும் வல்லாதிக்கவாதிகளையே அடக்கி ஆண்ட தமிழர் மண்ணிது! எட்டுகோடி தமிழர்களும் கிளர்ந்தெழுந்தால் டெல்லி ஏகாதிபத்தியமே குலைநடுங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
தன்னுரிமைச் சிக்கல்:
தம்பி பேரறிவாளன் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்தானெனக் கூறி, ஆளுநரின் அதிகார வரம்பைச் சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் தார்மீகக் கடமையாகிறது. இது இணையச் சூதாட்டம் தொடர்புடைய சிக்கல் மட்டுமில்லை; மாநிலத்தின் தன்னுரிமைச்சிக்கல்; சட்டமன்றத்தின் இறையாண்மை தொடர்பான சிக்கல்!
தப்பிக்க முயலாமல்:
ஆகவே, தங்களிடம் அதிகாரமில்லை எனக்கூறி, தட்டிக்கழித்து தப்பித்துக்கொள்ளும் அலட்சியப்போக்கை மேற்கொள்ளாது தமிழக அரசு முனைப்போடு செயலாற்ற வேண்டுமெனவும், இணையச் சூதாட்டங்களுக்குத் தடையை நிலைப்படுத்த சனநாயகப்போராட்டமும், சட்டப்போராட்டமும் மேற்கொள்ள வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.