தமிழ்நாடு

”மதுரை மண்ணை மிதித்தாலே வெற்றி நிச்சயம்....” வெற்றியின் மகிழ்ச்சியில் எடப்பாடி!!!

Malaimurasu Seithigal TV

அதிமுக முதலாம் இடத்தில் உள்ளது என்று பத்திரிக்கைகள் எழுதுங்கள்.  மக்களுக்காக உழைக்கும் இயக்கம் அதிமுக.  குடும்பத்திற்காக உழைக்கும் இயக்கம் அல்ல.

வழக்கும் தீர்ப்பும்:

ஈபிஎஸ்ஸின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.  இந்நிலையில் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.  

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளதையடுத்து ஈபிஎஸ் ஒற்றை தலைமையாக உருவெடுத்துள்ளார்.

திருமண நிகழ்வில்:

உச்சநீதிமன்ற தீர்ப்பின் போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வீட்டு திருமண நிகழ்வில் இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி.  திருமண நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அனைத்து மக்களும் பல்லாண்டு எல்லாம் பெற்று வாழ வேண்டும் எனவும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அருள் ஆசியோடு 51 ஜோடிகளும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனவும் வாழ்த்து தெரிவித்தார்.  

மேலும் திருமணம் என்பதுசொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்பார்கள் எனவும் மணமக்களுக்கு இது பொன்னான நாள் எனவும் கூறிய எடப்பாடி மணமக்கள் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும் என அறிவுரை கூறினார்.

வராத தூக்கம்:

ஆர்பி உதயகுமாரை குறித்து பேசிய எடப்பாடி பல்வேறு பதவிகளில் அவர் இருந்தாலும் அடக்கம் என்பது அவருடைய தனிச்சிறப்பு எனத் தெரிவித்துள்ளார்.  மேலும் தீர்ப்பை குறித்து பேசிய எடப்பாடி உச்ச நீதிமன்றத்தில் நாளைய தீர்ப்பு வரும் என்றவுடன்  தீர்ப்பை எண்ணி தூக்கம் வரவில்லை எனவும் அவரிடத்தில் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தொடர்ந்து பேசி வந்ததாகவும் கூறியுள்ளார்.

நல்ல தீர்ப்பு:

தொடர்ந்து பேசுகையில் “ஒரு நல்ல காரியத்தில் நாம் கலந்து கொள்ள உள்ளோம்.  ஆகையால் வெற்றி நிச்சயம் என்று எண்ணி இங்கு வந்தேன். அது போல் வெற்றி.  திருமங்கலத்தில் உள்ள அம்மா கோயில் அமைந்துள்ள இடம் தெய்வங்கள் உள்ள இடம்.  அது சக்தி வாய்ந்த இடம்.  அவரது மகிமையினாலேயே இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது.  இது உண்மையிலேயே நல்ல தீர்ப்பு.” எனப் பேசியுள்ளார்.

எட்டப்பர்கள்:

மேலும், சக்தி மிக்க தலைவர்கள் என்றால் அது நம்ம தலைவர்கள்எனவும் புரட்சித்தலைவி பல்வேறு இடர்பாடுகளைசந்தித்து வந்தார் எனக் கூறியுள்ளார்.  அதனோடு சில எட்டப்பர்கள் அதிமுகவை அழிக்க நினைத்ததாகவும் அவர்கள் திமுகவிற்கு B அணியாக இருந்தார்கள் எனவும் கூறிய எடப்பாடி அவர்களுக்கு உச்சநீதிமன்றம் முடிவுகட்டிவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையில் எழுதுங்கள்:

அதனைத் தொடர்ந்து அதிமுக முதலாம் இடத்தில் உள்ளது என்று பத்திரிக்கைகள் எழுதுங்கள் எனவும்
மக்களுக்காக உழைக்கும் இயக்கம் அதிமுக எனவும் குடும்பத்திற்காக உழைக்கும் இயக்கம் அல்ல எனப் பேசியுள்ளார்.  மேலும் தர்மத்தின் அடிப்படையில் ஊடகங்கள் இருக்க வேண்டும் எனவும் மதுரை மன்னை மிதித்தாலே வெற்றி நிச்சயம் எனவும் தெரிவித்துள்ளார்.

உயிரான தீர்ப்பு:

இந்த அமோகமான தீர்ப்பு ஒன்றைரை கோடி தொண்டர்களுக்கு உயிர் தந்துள்ளது எனவும் அதிமுகவினரின் வீரத்தை குறைத்து மதிப்பிட முடியாது எனவும் கூறியுள்ளார்.  மேலும் ஈரோடு தேர்தல் சம்பந்தமாக அனைவருக்கும் புகார் தெரிவித்தோம் எனவும் இருப்பினும் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறிய எடப்பாடி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அனைவரும் இரட்டை இலைக்கு வாக்கு செலுத்துங்கள் எனக் கூறியுள்ளார்.  மீண்டும் ஒரு நல்ல தீர்ப்பாக இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி தீர்ப்பும் வரும் என நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார் ஈபிஎஸ்.

-நப்பசலையார்