சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று நான் கூறினேன் .தற்போது அதைவிட அதிக உறுதியுடன் உள்ளேன். எத்தனை வழக்குகள் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்படுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக சர்வதேச, தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற மாற்று திறனாளி விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்குரிய ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகையை வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சாமி கும்பிடக்கூடாது என்று நாங்கள் சொல்லவே இல்லை. அது அவரவர் விருப்பம். சனாதனவாதிகள் அனைத்து ஜாதியினரையும் கோயிலுக்குள் அனுமதித்தார்களா? அதற்கு திமுக சட்ட போராட்டம் நடத்தியது. இதனால்தான் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று நான் கூறினேன். அதில் தற்போது அதைவிட அதிக உறுதியுடன் உள்ளேன். இதற்காக எத்தனை வழக்குகள் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளேன் எனக் கூறினார்.
மேலும், சனாதனம் என்பது நிலையானது, மாற்ற முடியாது என்று சனாதனவாதிகள் கூறுகிறார்கள். ஒரு காலத்தில் பெண்கள் படிக்கக்கூடாது. வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றார்கள். இப்போது பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து சாதனை படைத்து கொண்டு இருக்கிறார்கள். ஒரு காலத்தில் கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற வேண்டும் என்றார்கள். ஆனால் தற்போது அது மாற்றப்பட்டுவிட்டது.
பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்றார்கள். அவற்றையெல்லாம் இப்போது பின்பற்றுகிறோமா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் முக்த் பாரத் (காங்கிரஸ் ஒழிந்த பாரதம்) என பிரதமர் மோடி கூறுகிறார். அதற்காக காங்கிரசில் உள்ளவர்களை எல்லாம் கொல்ல முடியுமா? காங்கிரஸ் கட்சியின் கொள்கையைத்தானே அவர் எதிர்க்கிறார். மோடி செய்பவது இனப்படுகொலை என்றால் நான் பேசியதும் இனப்படுகொலை தான் என தெரிவித்தார்.
இதையும் படிக்க-போதை ஆசாமியை தட்டிக்கேட்டதால் அரிவாள் வெட்டு...ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!